இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

வெண்பா....

மரபுக் கவிதை

மரபை பா வடிவங்கள் என்பார்கள்

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனப் பா வடிவங்கள் ஐந்து வகைப்படும்
********************
வெண்பா

வெண்பாவிற்கான இலக்கணங்களும், வெண்பா வகைகளும் குறித்துக் காண்போம்.

• வெண்பா இலக்கணம்
• மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் ஆகியனவே இடம்பெறும்; கனிச்சீர் வரக்கூடாது. 

• இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரும்; பிற தளைகள் வரலாகாது. 

• ஈற்றடி முச்சீருடையதாகவும், ஏனைய அடிகள் நான்கு சீர் உடையனவாகவும் அமையும். 

• ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு கொண்டு முடியும். 

• செப்பலோசை பெறும். 

• அடிவரையறை; குறைந்த அளவு இரண்டடி; பேரெல்லைக்கு வரையறை இல்லை.

• வெண்பா வகைகள்
வெண்பா ஆறு வகைப்படும். அவை பின்வருமாறு:
1. குறள் வெண்பா

இரண்டடிகளில் அமைவது. 

(எ.கா)
வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் 
உள்ளத் தனைய துயர்வு

2. சிந்தியல் வெண்பா
மூன்றடிகளில் அமைவது. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெறுவது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். தனிச்சொல் இவ்வாறு பெறாதது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும்.
1) நேரிசைச் சிந்தியல் வெண்பா
(எ.கா)
கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
செங்குவளை பூத்தாள் செயலென்னே- எங்கோமான் 
பங்குற்றும் தீராப் பசப்பு
2) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
(எ.கா)
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்
3) நேரிசை வெண்பா
நான்கடிகளையுடையது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறும். அத்தனிச்சொல் முன்னிரண்டடிகளின் எதுகையை உடையதாய் இருக்கும். முன்னிரண்டடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டடிகளில் ஓரெதுகையும் வருதல் பெரும்பான்மையாகும். இரண்டிற்கு மேற்பட்ட எதுகைகளும் வரலாம். எதுகையை ‘விகற்பம்’ எனச் சுட்டுவது உண்டு.
(எ.கா)
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்!
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்
4) இன்னிசை வெண்பா
நான்கடிகளில் அமையும். ஓரெதுகையோ, இரண்டெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.
(எ.கா)
கல்லா ஒருவர்க்குத் தம்வாயின் சொல்கூற்றம்;
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்;
அல்லவை செய்வார்க் கறம்கூற்றம்; கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்
5) பஃறொடை வெண்பா
5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.
(எ.கா)
நன்றி யறிதல், பொறையுடைமை, இன்சொல்லோ(டு)
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோ(டு)
ஒப்புர வாற்ற அறிதல், அறிவுடைமை,
நல்லினத் தாரோடு நட்டல், இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து
6) கலிவெண்பா
13 அடி முதல் பல அடிகளில் வரும். தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசைக் கலிவெண்பாவாகும். இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோரெதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் ‘கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வருவது நேரிசைக் கலிவெண்பா ஆகும்.
இன்னிசைக் கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும், நேரிசைக் கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும்.
இவை வெண்பா பற்றியனவாகும்.
nanri ;kaviaruvi Ramesh 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக