இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

கஸல்

கஸல்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்


கஸீதா 
கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர்இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது”1 என்பார் எம்.ஆர்.எம்.

கஸீதாவின் தன்மைகள்
கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்மைகள் குறித்து எம்.ஆர். எம். கூறுகையில், “ஒரு சம்பூரணமான கஸீதாவில் மூன்று தன்மைகள் அமைந்திருக்க வேண்டும். முதலில் கவிஞர் தம் அன்பிற்குரியாளின் இல்லத்திற்குச் செல்வதையும், அது வெறிச்சோடிக் கிடப்பதையும் விவரிக்க வேண்டும். இரண்டாவதாக, தாம் ஒருவரிடம் பரிசு நாடிச் செல்லும் போது வழியிலுள்ள பாலையின் வருணனைகளையும், அங்குத் தாம் அனுபவிக்கும் துன்பங்களையும் விவரிப்பதோடு, காட்டு விலங்குகளோடு தம்முடைய ஒட்டகத்தை ஒப்பிட்டு வருணிக்கவும் வேண்டும். மூன்றாவதாக, தாம் எவரை மனதில் கொண்டுள்ளோமோ அவரைப் புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பாவியற்ற வேண்டும். இதுவே கஸீதாவின் முக்கிய பகுதியாகும்”2 என்கிறார்.

அமைப்பு 
கஸீதாவின் அமைப்பு குறித்து மேலும், எம். ஆர். எம். கூறுகையில், கஸீதா முழுவதும் ஒரே சந்தத்தில் அமையப் பெற்றிருப்பதாலும் பாலை பற்றிய வருணனை திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக ஆனால், வெவ்வேறு சொற்களில் வருவதாலும் படிப்பவர்களை மட்டுமல்லாது இதனை எழுதும் கவிஞர்களையும் அலுப்படையச் செய்கிறது. எனவேதான் துல்ரும்மா என்ற கவிஞர் தம்முடைய பிரசித்தி பெற்ற கஸீதாவின் முதலடியை மட்டும் எழுதி, பின்னர் கருத்து வராததன் காரணமாக அத்துடன் அதனை வைத்தார் என்றும், நெடுங்காலம் சென்ற பின் அவர் இஸஃபஹான் சென்றிருந்த போது திடீரெனப் புதிய கருத்துத் தோன்றவே அக்கஸீதாவை எழுதி முடித்தார் என்றும் கூறப்படுகிறது. 

சில கவிஞர்கள் கஸீதா என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் கஸீதாவின் இலக்கணங்கள் அமையப் பெறவில்லை. மெய்ஞ்ஞானம் பற்றிய கஸீதாக்களும் அரபியில் இருக்கின்றன. ஒரு சூஃபி உறங்கும் போது, ‘மெய்ஞ்ஞானம் பற்றிக் கூறப்பட்டவைகளில் மோசூலிய கஸீதாவை விட மேலானது ஒன்றில்லை’ என்று கனவில் அசரீரியாக முழுங்குவதைச் செவியுற்றார் என்று கூறப்படுகிறது. இதனை எழுதியவர் மோசூலின் காஜியான அல்முர்த்தஜா என்பவராவார். அதில் ஒரு காதலன் தன் காதலியின் மீது கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானக் காதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது3 என்று கூறுகிறார்.
கஸீதாவின் தொடக்கத்தில் இருக்கும் பகுதிக்கு ‘தஸ்பீப்’ என்று பெயர். இந்த தஸ்பீப் பகுதியில் தான் கஜலுக்கான உணர்வுகள், தன்மைகள், நயங்கள் காணப்படும். நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிகளாகக் கஸீதா பாடப்பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக