இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

லிமரைக்கூ

லிமரைக்கூ
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது. 

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது. 

ஹைக்கூ, லிமரிக் என்னும் இரண்டு வகைக் கவிதைகளின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டு தமிழில் கவிதைப் படைக்கத்தக்க திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் மொழியாளுமை - கவித்துவ இயக்கம் ஆகிய இரண்டிலும் தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.

5-7-5 என்னும் அசையமைப்பு அடிகளைக் கருத்தில் கொண்டால் ஹைக்கூவின் தன்மை அதுவென உணர்ந்து மூன்றடிகளின் இடையடி சற்றே - ஒரு சீர் அளவே மிக்கிருக்க எழுதலாம். முதல், கடை அடிகள் தவிர்த்த இடையடிகள் சீர் குறைந்து வரும் லிமரிக்கைக் கருத்தில் கொள்ளும் போது - லிமரைக்கூவிலும் நடுவடி சீர் குறைந்து வரலாம் (இது சிறுபான்மை). மூவசைச் சீர்களைப் பயன்படுத்தும் போது அவை ஈரசைகளாகப் பிரிக்கத்தக்கதாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.

எடுத்துக்காட்டாக, ‘வந்ததற்காய்’ என்னும் மூவசைச் சீர், ‘வந்த + தற்காய்’ என இரண்டு சீராகப் பிரியும் வாய்ப்புள்ளதாகவும், ‘வந்ததனால்’ என்பது, ‘வந்த + தனால்’ எனப் பிரிவும் போது அவ்வாய்ப்பைப் பெறாததாகவும் அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

3 அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ.

தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ.

ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்
-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ. 

குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்

பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
- ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்

எதிரெதிர் தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்

வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
- கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி

மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்

வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
- ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்

இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!

கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு

கவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.

இன்று தமிழில் இவ்வகை வடிவங்களைத் தவிர ஹைபுன், லிபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் எனப் பல வடிவங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன. 
காண்க : www.rameshpoet.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக