இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

கவிதை எழுதுவது எப்படி? (04)

தமிழில் புதுக்கவிதை - பாரதியின் வசன கவிதைகள் 

புதுக்கவிதையின் தோற்றத்துக்கு வித்திட்டவராகப் பாரதியைத்தான் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான கவிதைகளை யாப்பிலும், புதிய சந்த யாப்புகளிலும் எழுதிய பாரதியைப் புதுக்கவிதையின் முல முன்னோடியாகக் குறிப்பிடுவது எவ்வாறு? இதற்குப் பாரதி கவிதையின் உள்ளடக்கங்களே விளக்கம் தர வல்லவை. தமிழ்க் கவிதையில் அதற்கு முன்பு இல்லாத புதுப்புதுக் கருத்துகளும் புதிய பார்வைகளும் பாரதி கவிதைகளில் இடம்பெற்றன. அரசியல், தேசிய இயக்கம், மொழியுணர்வு, பெண்ணுரிமை போன்றவைகள் தமிழ்க் கவிதைக்கு முற்றிலும் புதியவை. ஆன்மிகப் பார்வையிலும் கண்ணன் பாட்டு புதுமையானது; பாஞ்சாலி சபதம் அமைப்பிலும் பொருளிலும் புதுமை வாய்ந்தது. பல காலமாக ஏற்கப்பட்டிருந்த பத்தாம்பசலிக் கோட்பாடுகளையும் மூட நம்பிக்கைகளையும், சாதி சமய வேறுபாடுகளையும் வன்மையாக எதிர்த்த வகையில் பாரதியின் கவிதை இன்றுவரை புதுமை மங்காதது. ‘புதியன விரும்பு’ , ‘தேசத்தைக் காத்தல் செய்’ , ‘தையலை உயர்வுசெய்’, ‘கொடுமையை எதிர்த்து நில்’, ‘கற்பை இரு பாலார்க்கும் பொதுவில் வைப்போம்’ என்றெல்லாம் வெடிப்புறப் பேசிய பாரதியின் கவிதைதான் உள்ளடக்க அளவில் தமிழின் முதல் புதுக்கவிதை என வேண்டும். 

வடிவ அடிப்படையிலும் பாரதியே முதன்முதலாகச் சோதனை செய்து பார்த்தவர். காட்சி, சக்தி, காற்று, கடல் என்ற தலைப்புகளில் பாரதி படைத்த வசன கவிதைகளே புதுக்கவிதைக்கு வடிவ முன்னோடிகள் ஆகும். உபநிடதங்களின் கவித்துவ அழகுகொண்ட தத்துவத்தில் திளைத்த பாரதி அவற்றைத் தமது தனிப்பார்வையில் எடுத்தளித்தவையாக அவற்றைக் கருதலாம். அவற்றை வசன கவிதையாகப் படைக்கலாம் என்ற உந்துதலைத் தந்தவர் முன்பு நாம் பார்த்த அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன். விட்மனின் புரட்சிகரமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த Free Verse எனும் வசன கவிதை வடிவம் அவருக்குக் கைகொடுத்தது. இதனை உணர்ந்த பாரதி ஆன்மிக எழுச்சியை, ‘தத்துவக் கருத்துகளைத்’ தமக்கு அனுபவம் ஆகிய முறையில் வெளியிட ஏற்ற வடிவமாக வசன கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். 

வேதம், கடல், மீன், புயற்காற்று, மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பலதோற்றம்.
உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் ‘தான்’.
‘தானே’ தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.

(பாரதியார் கவிதைகள், ப.589) 

‘அகம் பிரம்மாஸ்மி’ , ‘தத்வம் அஸி’ என்னும் உபநிடத மகா வாக்கியங்கள் உணர்வு பொங்கும் கவிதை வாக்கியங்களாக இங்கு வெளிப்பட்டுள்ளன. 

காற்றே உயிர் - அவன் உயிர்களை அழிப்பவன்.
காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை.
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.

(பாரதியார் கவிதைகள், ப.614) 

காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் தத்துவமே எனினும் பாரதி சொல்லும் விதத்தால் அது நெஞ்சில் புதுவிதமாகப் பூக்கிறது. இத்தகைய வசன கவிதை முயற்சியில் பாரதி தம் வாழ்வின் இறுதி ஆண்டுகளிலேயே ஈடுபட்டிருந்திருக்கிறார். வாழ்நாள் மேலும் இருந்திருந்தால் வசன கவிதையின் அடுத்தடுத்த படிநிலைகளை அவர் வளர்த்துக் காட்டியிருக்கக் கூடும். 
பிச்சமூர்த்தியும் பிறரும் 

பாரதிக்கு அடுத்துப் புதுக்கவிதை முயற்சியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் ந. பிச்சமூர்த்தி. ‘மணிக்கொடி’ இதழில் 1934இல் பிச்சமூர்த்தி எழுதத் தொடங்கினார். செறிவாகவும் தெளிவாகவும் அறிவு பூர்வமான பார்வையில் கருத்துகளை அலசவும் சிந்தனைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் அவருக்கிருந்த இயல்பான அறிவுத் திறம் அவர் கவிதையில் பளிச்சிட்டது. 

நாங்களோ கலைஞர்
ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம்.
முதுகோடு கொண்டு விதியை எதிர்ப்போம்.
கீழுல கேழும் தயங்காது இறங்கி
ஜீவன்கள் லீலையில் கூசாது கலப்போம்.
அணிலைப்போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம் 

(ந. பிச்சமூர்த்தி கவிதைகள், ப. 14) 

என்னும் வரிகளில் தமது கவிதை இயக்கத்தின் போக்கை அழகாக வெளிப்படுத்துகிறார் பிச்சமூர்த்தி. அவர் கவிதைகளில் வாழ்வின் முரண்களும், இயற்கையோடு மனிதன் கொள்ளத்தக்க உறவு இணக்கமும் முதன்மை பெற்றன. தத்துவமும் எளிய வெளிப்பாடு கண்டது. உணர்ச்சிக் கூறு மட்டுமின்றி அறிவுக் கூறும் கவிதையில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் வசன கவிதை சற்றுச் செறிவடைந்தது. பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து அவருடைய நண்பர் கு.ப.ராஜகோபாலனும், க.நா.சுப்ரமண்யமும் புதுக்கவிதை எழுதத் தொடங்கினர். பின்னர் வல்லிக்கண்ணனும் புதுமைப்பித்தனும் இவ்வரிசையில் இணைந்தனர். இவர்களது படைப்புத் தொடங்கிய காலம் 1937க்கும் 1944க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். புதுமைப்பித்தனைத் தவிர மற்றவர்களிடம் வசன கவிதைத் தன்மையே மிகுந்திருந்தது. 

வாழ்க்கை ஒரு வெற்றி, ஒரு துடிப்பு
ஒரு காதற்பா, ஒரு இசை
மண்ணின் மாய மோனையில் பிறந்து
அரைத்தூக்கத்திலும் அதிசயத்திலும் அது உதிக்கிறது
கண் கண்டதற்கு மேல் ஓடுகிறது கனவு

(சிறிது வெளிச்சம், கு.ப.ரா.) 

என்னும் வரிகளில் அழகுணர்ச்சியில் திளைப்பவராகக் காட்சி தரும் கு.ப.ராஜகோபாலன் பெண்மையின் மாபெரும் சக்தியையும் தம் கவிதைகளில் படம் பிடித்தவர். 

கவிதை பற்றிய புதுமைப்பித்தனின் பார்வை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. சந்தலயம், சீர், அடியமைப்பு, ஒழுங்கு ஆகியவைகளைத் துறக்க அவர் விரும்பவில்லை. கவிதைகளின் உள்ளடக்கமாக அமைந்தவை, அவருடைய கதைகளில் காணப்படும் சமூக அங்கதம், எள்ளல், கண்டனம் ஆகியவைகளே. பின்னர் இக்கூறுகள் ஞானக்கூத்தன், மீரா போன்ற கவிஞர்களிடம் வளர்ச்சி கண்டன. மதிப்பீடுகளைத் தயக்கமில்லாமல் தூக்கி எறிந்துவிடும் புதுமைப்பித்தனின் துணிச்சல் பிற்காலக் கவிஞர் பலரிடமும் ஏதாவது ஓர் அளவில் கலந்துவிட்டிருக்கிறது. இவ்வகையில் புதுமைப்பித்தனின் கவிதை அளவில் குறைவானதே ஆனாலும் புதுக்கவிதைக்கு, அதன் வளர்ச்சிக்கு வழிகாட்டிய ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 

பாரதிதாசன் போன்றார் கற்பனையின் உச்சியில் நின்று சுவையூறிக் காதல் கவிதைகள் படைத்த சமகாலத்தில்தான் அந்த உன்னதப் படுத்தலுக்கு எதிராகக் காதலின் இன்றைய நடப்பியல் அதிர்ச்சியைப் படைத்துக் காட்டினார் புதுமைப்பித்தன். 

வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம்

(புதுமைப்பித்தன் படைப்புகள், 2ஆம் தொகுதி, ப.204) 

என மற்றொரு மதிப்பீட்டின் சரிவையும் அவரது கவிதை சொடுக்கிக் காட்டுகின்றது. 

புதுமைப்பித்தனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த க. நா. சுப்ரமண்யம் ‘சூறாவளி’ என்னும் பெயரில் தாம் தொடங்கிய வார இதழில் தமது முதல் கவிதையை வெளியிட்டார். அதன் பின்னர் க. நா. சு. எழுதிய கவிதைகள் சிலவற்றில் புதுமையான சில பார்வைப் பொறிகள் தென்பட்டன என்பது உண்மை. ஆனால் வடிவத்தில் பெரும்பாலும் வசன கவிதையாகவே அவை அமைந்தன. க. நா. சு. வும், சி.சு.செல்லப்பாவும் புதுக்கவிதைக்கு அளித்த பங்கீடு அவர்கள் கவிதைகள் மூலமாக அன்றி அவர்களது கட்டுரைகள் மூலமாகவே என்பதுதான் உண்மை. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., க.நா.சு., புதுமைப்பித்தன் ஆகியோர் கட்டுரைகள் மூலமாகவும் பத்திரிக்கைகளின் நிகழ்ந்த விவாதங்களில் கலந்து கொண்டும் வசனகவிதை-புதுக்கவிதை தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர். மணிக்கொடி, தினமணி, சூறாவளி, கலாமோகினி, நவசக்தி, கிராம ஊழியன், சிவாஜி, கவிக்குயில் போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளையும், அவை தொடர்பான விவாதங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டன. 

இந்தக் காலக்கட்டத்தில் வசன கவிதை-புதுக்கவிதை முயற்சிகள் அதிகம் கவனிப்புக்கு உட்படாதவைகளாகவே இருந்தன. 30களின் இறுதியில் தொடங்கி ஈழத்திலும் சில புதுக்கவிதை முயற்சிகள் நடைபெற்றன எனவும் விரைவில் அவை ஆதரவு குன்றிச் சோர்வடைந்தன எனவும் வல்லிக்கண்ணன் தமது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலில் எடுத்துக் காட்டுகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக